Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 0 comments ]

வெற்றி எனும் முகவரியை அடையப் பயன்படும் பாதையின் பெயர் தோல்வி. தோல்வி நம் வாழ்க்கையின் ஓர் அங்கம். இந்த உலகத்தில் தோல்வியைச் சந்திக்காதவர் எவரும் இல்லை. தோல்வி ஒவ்வொரு முறையும் ஒரு பாடத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் முழுவெற்றி பெற வேண்டுமானால் தோல்வியை நாம் சந்தித்தே தீர வேண்டும். தோல்வி ஒரு வாழ்க்கை நியதி. தோல்வியையே சந்திக்காமல் நான் சாதித்தேன் என்று எவராவது சொன்னால் அது உலகின் எட்டாவது அதிசயமாகும்!!!

வாழ்க்கையில் சாதித்த எந்த ஒரு மனிதனையும் கேட்டுப் பாருங்கள். ஒரு வெற்றியைப் பெற அவர் சந்தித்த தோல்விகள் ஏராளமாக இருக்கும். பட்ட அவமானங்களோ அதைவிட அதிகமாக இருக்கும். வெற்றி என்றால் என்ன என்பதை உங்களுக்குப் புரிய வைக்க உதவும் ஒரு கருவியே தோல்வி.


உங்களுக்கு மிகவும் பிடித்தமாக பத்து சாதனையாளர்களின் பெயர்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்க்கை வரலாறு புத்தகங்களை எடுத்து ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் கூர்ந்து படித்துப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனைமுறை தோற்றிருக்கிறார்கள் என்பதைப் பட்டியலிடுங்கள். வாழ்க்கையில் தோற்காமல் சாதனை படைத்தவர் இந்த உலகத்தில் எவரும் இல்லை என்பது உங்களுக்குப் புரியும்.


தோல்விகளைக் கண்டு பயந்து ஓடுபவர்களை தோல்வியானது தொடர்ந்து துரத்திச் சென்று அழித்துவிடும். தோல்விகளைத் துச்சமென நினைத்து அதை எதிர்த்துப் போராடுபவன் எவனோ அவன் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கிறான். ஸ்காட்லாந்து தேசத்தின் மன்னன் இராபர்ட் புரூஸ். ஸ்காட்லாந்து நாட்டிற்கும் இங்கிலாந்து நாட்டிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றது. இதில் பலமுறை இராபர்ட் புரூஸிற்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இதனால் இராபர்ட் புருஸின் ஆட்சி நிரந்தரத்தன்மை இல்லாமல் இருந்தது. மேலும் அந்நாட்டில் ஜான் பாலியால் என்பவன் இராபர்ட் புரூஸிற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான். இராபர்ட் புரூஸை ஒழித்து, தானே மன்னர் பதவியில் அமர வேண்டும் என்று அவன் துடித்துக் கொண்டிருந்தான். இங்கிலாந்து மன்னரான எட்வர்டு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருவருக்கும் சமசரம் செய்து வைக்கிறேன் என்று இடையில் புகுந்தார். ஆனால் தான் நினைத்தபடியே இரண்டு பேரையும் சமரசம் செய்யாமல் அவர்களையும் ஸ்காட்லாந்து தேசத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார்.


எட்வர்டு மன்னரின் இத்தகையக் கேவலமான பேச்சைக் கேட்ட இராபர்ட் புரூஸ் ஆத்திரமடைந்தான். எனவே மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை எதிர்த்துப் போரிடுவது என்று முடிவு செய்து போர் தொடுத்தான். இம்முறையும் புரூஸிற்குத் தோல்வியே மிஞ்சியது. விரக்தி அடைந்த இராபர்ட் புரூஸ் ஒரு மலைப் பகுதிக்குச் சென்றான். அங்கே இருந்த ஒரு குகைக்குள் நுழைந்து தன் நாட்களை வேதனையுடன் கழிக்கலானான்.


ஒருநாள் அந்தக் குகைக்குள் இருந்த சிலந்தி ஒன்று தனக்கான வலையைப் பின்னிக் கொண்டிருந்தது. வலை பின்னும்போது காற்றினால் நூலிழையைப் பிடித்தவாறு இங்கும் அங்கும் அந்தச் சிலந்தி ஆடிக்கொண்டிருந்தது. அந்த நூலிழையினை குகையின் சுவற்றில் ஒட்ட வைக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வலையைப் பின்ன முடியும். அந்தச் சிலந்தி இதற்காகப் பலமுறை போராடியது. ஆனால் அதனால் அந்த நூலின் முனையைக் குகைச் சுவற்றில் ஒட்ட வைக்க முடியவில்லை. குகைக்குள் உட்கார்ந்திருந்த இராபர்ட் புரூஸ் சிலந்தியின் இந்த போராட்டத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

சிலந்தியின் போராட்டம் சில மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிலந்தி ஓயவே இல்லை. தொடந்து போராடி ஒரு கட்டத்தில் அது நூலிழையினைச் சுவற்றில் ஒட்டி, தனது வலையினை வெற்றிகரமாகப் பின்னி முடித்தது. இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட இராபர்ட் புரூஸின் மனதில் ஒரு வெறி பிறந்தது. ஒரு சின்னஞ்சிறு சிலந்தி போராடி அடைந்த வெற்றி அவன் மனதில் ஒரு புது உத்வேகத்தை ஏற்படுத்தியது. அங்கிருந்து உடனே புறப்பட்டுச் சென்று தன் படைவீரர்களை ஒன்று திரட்டினான். இராபர்ட் புரூஸ் இங்கிலாந்துப் படையினைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வெறியோடு போர்க்களத்திற்குச் சென்றான். தன் வீரர்களை ஊக்கப்படுத்திப் போர் நடத்தினான். இறுதிவரை தளராமல் போராடிய சிலந்திக்கு வெற்றி கிடைத்ததுபோல இராபர்ட் புரூசும் தன் வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து நாட்டுப் போர் வீரர்களைத் துரத்தி அடித்தான். வெற்றி வீரனாய் ஸ்காட்லாந்து தேசத்தின் வலிமையான மன்னனாய்ப் பதவி ஏற்றுக் கொண்டான்.


தோற்று விட்டோமே என்று கவலைப்பட்டு மனதைத் தளர விடாதீர்கள். வருத்தப்பட்டு சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். விடுதலைப் போரில் காந்திஜி சந்திக்காத தோல்விகளா? அவமானங்களா? அவர் மனஉறுதியோடு அனைத்தையும் எதிர்கொண்டதால்தான் இன்று நாம் அவரை ‘தேசப்பிதா’ என்று அழைக்கிறோம்.


தற்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ஓர் அங்கமாக வெற்றியை மட்டுமே போதிக்கிறார்கள். மற்றொரு அங்கமான தோல்வியைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இல்லை. அதன் காரணமாக எதிர்காலத்தில் அவர்கள் தோல்வியைச் சந்திக்கும்போது மனமுடைந்து போகிறார்கள். தோல்விகளை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உடனே ஒரு விபரீதமான முடிவினை எடுக்கிறார்கள். அது தற்கொலை. தோல்விக்கு முடிவு தற்கொலைதான் என்று ஒவ்வொருவரும் தீர்மானித்திருந்தால் இந்த உலகம் இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்குமா? இந்த உலகத்தில் ஒரு மனிதன்கூட மிஞ்சி இருக்க மாட்டான்.


ஒவ்வொரு கண்டுபிடிப்பிற்குப் பின்னாலும் பல தோல்விகள் ஒளிந்துள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மின்சார பல்பினைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்காக அவர் எவ்வளவு உழைத்தார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.


பல்பு எரிய முக்கியமான ஒரு பொருள் டங்ஸ்டன். பல்பில் டங்ஸ்டனைப் பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும் என்பதை அவர் சுமார் ஆயிரம் முயற்சிகளுக்குப் பின்னரே கண்டுபிடித்தார். அதற்கு முன்னால் மூங்கில் இழை, சிறு கம்பி முதலிய பல பொருட்களை இணைத்துப் பார்த்தார். ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இவ்வாறு ஆயிரம் தோல்விகளுக்குப் பின்னரே டங்ஸ்டன் இழையினை பல்பிற்குள் வைத்து சோதித்து, எடிசன் வெற்றி கண்டார்.


அப்போது ஒரு நண்பர் அவரிடத்தில் கேட்டார்.


"ஆயிரம் முறை தோல்வியைச் சந்தித்தீர்களே. உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?"


"நிச்சயமாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒரு சோதனையை எவ்வாறு செய்யக்கூடாது என்பதைத் தெரிந்து கொண்டேன். இறுதியில் வெற்றியும் பெற்றேன்".


சாதனையாளர்கள் தங்களுடைய தோல்விகளை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தோல்விகளை தோல்விகளாகக் கருதாத காரணத்தினால்தான் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றியைச் சந்திக்கிறார்கள்.


ஒவ்வொருமுறை தோற்கும்போதும் பெரியதொரு வெற்றியை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். பதினைந்தாவது மாடிக்குச் செல்ல வேண்டுமென்றால் பதினான்கு மாடிகளை நீங்கள் நிச்சயம் கடந்துதான் ஆக வேண்டும். தோல்விப்படிகளை மெல்ல மெல்லக் கடந்துதான் வெற்றியின் முகவரியை நீங்கள் அடைய முடியும். வெற்றியின் முகவரியை அடைய விரும்பினால் நிச்சயம் நீங்கள் தோல்விகளைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.


தோற்றுப் பாருங்கள். அப்போதுதான் வெற்றியின் முகவரி என்ன என்பது உங்களுக்குப் புரியும். வெற்றிகளும் உங்களைத் தேடி வரும்

நன்றி : ஆர்.வி. பதி, 'தன்னம்பிக்கை'

0 comments

Post a Comment