Watch live streaming video from radiomarte2 at livestream.com
| 0 comments ]

பெரும் பொருட் செலவில் அழகுபடுத்தப்பட்டு வரும் மெரீனா கடற்கரைக்கு 24 மணி நேர தனியார் பாதுகாப்பை வழங்குவது குறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் யோசித்து வருகிறது.

தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி மூலம் 24 மணி நேரமும் இங்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ரூ. 17 கோடி செலவில் தொடங்கப்பட்ட மெரீனா கடற்கரை அழகுபடுத்தும் திட்டம் தற்போது முடியும் தருவாயை நெருங்கி விட்டது.

நவம்பர் மாதம் இந்தத் திட்டம் முடிவடையும். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகள், நீரூற்றுகள், பளபள நடைபாதைககள், தடுப்புக் கம்பிகள் என உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பது இப்போது முக்கியமாகியுள்ளது.

மாநகராட்சியில் ஊழியர் பற்றாக்குறை இருப்பதால், இந்தப் பணிக்கு தனியார் பாதுகாவலர்களைப் பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி கூறுகையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை வெளியிலிருந்து பெறத் திட்டமிட்டுள்ளோம். குறைந்துத 10 பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவார்கள். 24 மணி நேரமும் இவர்கள் பணியில் இருப்பார்கள். இதற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்படும்.

மேலும், அழகுபடுத்தப்பட்ட மெரீனாவை பராமரிக்கும் பணிக்காக இளநிலைப் பொறியாளர் தலைமையில் ஒரு தனிப் பிரிவையும் மாநகராட்சி அமைக்கவுள்ளது. இதில் கன்சர்வன்சி இன்ஸ்பெக்டர், பணியாளர்கள் இருப்பார்கள். 2 ஷிப்டுகளாக இவர்கள் செயல்படுவார்கள்.

விரைவில் இந்தத் திட்டத்திற்கு மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளதாக லக்கோனி தெரிவித்தார்.

இந்தநிலையில் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள புல்வெளிகளை பராமரிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 70 ஊழியர்கள் அங்குள்ள பூங்காக்களைப் பராமரிப்பது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர அவ்வப்போது கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியையும் மாநகராட்சி மேற்கொள்ளவுள்ளது. இதற்காக தலா ரூ. 3 லட்சம் மதிப்பிலான தூய்மைப்படுத்தும் எந்திரம் வாங்கப்படவுள்ளது. மொத்தம் நான்கு எந்திரங்கள் இதுபோல வாங்கப்படும்.

இதன் மூலம் நடைபாதைகள் சுத்தப்படுத்தப்படும். அதேபோல, புல்வெளிகளும் சிறப்பாக பராமரிக்கப்படும்.

மேலும் கடற்கரைக்கு வருவோருக்கு நல்ல தண்ணீர் கொடுப்பதற்காக ஆர்.ஓ அமைப்பும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்காக தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி தொடர்பு கொண்டுள்ளது.

0 comments

Post a Comment